விடுதலையின் சின்னமாய்த் திகழும் வாசல்!
தமிழ்ச்செல்வன்
பயணங்கள் முடிவதில்லை ! -1
சிறு வயதிலிருந்து குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் பயணக் கட்டுரைகளைப் படிக்கும்பொழுது அதன்மீது எனக்குள் படர்ந்த ஈர்ப்பையும் பல புதுமையான தகவல்களைக் கற்கிறோம் என்ற ஆர்வத்தையும் உணர முடிந்தது. அதுவே எனக்குப் பல அரிய தகவல்களைக் கொண்ட நூல்கள் எழுத வேண்டும் என்கிற பேரவாவைத் தூண்டியது.
அதுபோல, லியோ டால்ஸ்டாய் என்னும் ருசிய நாட்டு எழுத்தாளர் தனது 24 வயதிலேயே உலகை மயக்கும் படைப்பை அளித்தார் என்ற செய்தி கல்லூரி நாட்களில் எனக்குள் புத்தகம் எழுத நம்பிக்கை என்னும் விதையினை விதைத்தது.
எனது நண்பரும் புத்தகம் எழுதுவதற்கு எனக்கு உறுதுணையாகவும் விளங்கும் அருணகிரி அண்ணனின் தூண்டுகோலும் ஆலோசனையும் பயண இலக்கியம் படைக்கும் ஆர்வத்தை என்னுள் மேலோங்கச் செய்தது.
இப்படியாக எழுதும் ஆர்வம் படிப்படியாக எனக்குள் கருவாகி வளர்ந்து முதல் புத்தகமாய் பிறந்தபொழுதுதான், தமிழில் பயண இலக்கியங்கள் மிக குறைவாகவே வெளிவந்துள்ளது என்ற கசப்பான உண்மை தெரிந்தது. தமிழர்களில் பாதிக்கும் குறைவான மக்கட்தொகைக் கொண்ட மலையாளிகள் 5000ற்கும் மேற்பட்ட பயண இலக்கியங்களைப் படைத்திருக்கும்பொழுது, தமிழில் 1000 பயண நூல்கள் கூட வெளிவரவில்லை என்ற செய்தி உண்மையில் வியப்பை அளித்தது.
நான் படித்த முதலாவது பயண இலக்கிய புத்தகம், எனது நண்பர் அருணகிரி அவர்கள் எழுதிய 'உலகம் சுற்றும் வாலிபன்'. ஓர்வகையில் அவருடைய புத்தகம்தான் எனக்கு பல நாடுகளுக்கு செல்லவேண்டும், அங்கு நிறைய கற்க வேண்டும் என்ற ஆவலினைத் தூண்டியது. அருணகிரி அவர்கள் தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் புத்தகம் எழுதச்சொல்லி தவறாது குறிப்பிடுவார். ஏற்கனவே எழுதவேண்டும் என்ற எனது ஆவல், அவர் என்னிடம் இதனை வலியுறுத்தியபொழுது பொங்கிப் பெருகியது.
ஓராண்டுக்கு முன், த.கவியரசுவின் 'மேலைக்கடலில் ஈழக்காற்று' என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற லண்டன் சென்று வந்த நூலாசிரியரின் பயணத்தின் பதிவிது. ஒரு பயண இலக்கியத்தில் இத்தனை சுவையான தகவல்களைத் தரமுடியுமா என்று வியந்தேன். பல அரிய தகவல்களுடன் தான் சந்தித்த ஈழ மக்களிடம் தெரிந்து கொண்டவைகளோடும் சில வரலாற்றுத் தகவல்களையும் அதில் எழுதியிருந்தார். நான் படித்த இரண்டாவது பயண இலக்கிய புத்தகம் இதுதான்.
இவ்விரண்டு புத்தகங்களும் பயண இலக்கியம் படைக்க எனக்கு நல்லதொரு வழிக்காட்டியாய் இன்றளவும் திகழ்கிறது.
'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு' என்றொரு பழமொழி உண்டு. எனக்கும் கடல் கடந்து பல நாடுகளுக்கு பறக்க ஆசை. ஆனால், திரவியம் தேட அல்ல. 'சென்றுடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்' என்றானே பாரதி, அதுதான் எனது ஆசையும். பயணத்தில் நிறையப் படிக்கவேண்டும். அதனை தெளிவாய் பதிக்கவேண்டும். தமிழ் பேசும் நல்லுலகுக்கு அது பயன்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
காலமும் சூழலும் பல பயணங்களை மேற்கொள்ள எனக்கு வசதி அளித்திருப்பதாலும் ஏற்கனவே சில நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டிருப்பதாலும், அடுத்த படைப்பும் எனது பயணக் கட்டுரைகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்ற விருப்பம் வளரத்தொடங்கியது. அதற்கேற்ற முயற்சியே இனி வரவிருக்கும் கட்டுரைகள்.
செர்மனி பயணமும் தமிழீழ விடியலுக்கான நம்பிக்கையும்
நோர்வே நாடுதான் நான் முதன்முதல் கால்பதித்த நாடு. ஐரோப்பிய நாடொன்றில் வசித்து வருவதால் அருகாமையில் உள்ள ஒருசில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஆவல் கொண்டிருந்தேன். அதில் ஒன்றுதான் செர்மனி. சிறுவயதில் வரலாறு படிக்கும்பொழுதிலிருந்தே எனக்கு செர்மனி மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.
முதல் காரணம் இட்லர் என்னும் சர்வாதிகாரியால் உருவானது. முதலில் அவருடைய செர்மனி நாட்டின் மீதிருந்த காதலையும் அந்நாடு ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஆளவேண்டும் என்ற கொள்கை வெறியையும் பார்த்து மதித்தும் இருக்கிறேன் அதற்காக அவர் நிகழ்த்திய கொடுமைகளையும் இனவிரோதப் போக்கையும் கண்டு வெறுத்தும் இருக்கிறேன்.
பெண்கள் வெறும் குழந்தை பெற்றுத்தரும் இயந்திரம் என்று அவர் நினைத்திருந்த மனப்போக்கை, இயல்பிலேயே பெரியாரிய, பெண்ணியம் சார்ந்த எனது சிந்தனை ஏற்கமறுத்தது.
அடுத்து, அறிவியலின் மீதிருந்த காதலால் நான் மதிக்கும் ஐன்ஸ்டீன் அவர்களின் தலைக்கு விலை வைத்து அவரைக் கொல்ல நினைத்தார் என்று அறிந்தபொழுது அவர் மீது வெறுப்பு அதிகமானது.
எனக்கு செர்மனி நாட்டின் மீது இருந்த ஈர்ப்பிற்கு அடுத்தக் காரணம் ஐன்ஸ்டீன் அவர்கள் பிறந்து வளர்ந்த நாடு என்பதால்.
சப்பான் நாட்டிற்கு சென்று வந்தபிறகு எந்த மக்களை தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ஐன்ஸ்டீன் தன் மகனுக்கு கடிதம் எழுதினாரோ அதே மக்களைக் கொல்ல தனது அறிவியல் கோட்பாட்டின் தொடர்ச்சியால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு பயன்பட்டது எனும் வரலாறில் நிகழ்ந்த சோகமான பதிவை இங்கு நினைத்துப்பார்க்கிறேன்.
தமிழ்த்திரைப்பாடலில் 'செர்மனியின் செந்தேன் மலரே' பாடல் மிகவும் பிடிக்கும். அதுபோல செர்மனியின் அழகும் அதில்தான் முதன்முதல் பார்த்தேன். இப்படி எண்ணற்றவைகள் இருந்தது செர்மனி பயணத்திற்கான தூண்டுதலுக்கு.
செர்மனி செல்ல வேண்டும் என்று நானும் எனது மனைவியும் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டிருந்தோம். இருப்பினும் துயரமிக்க காரணத்தால் எனது மனைவி தமிழகத்தில் இருக்க நான் மட்டும் நோர்வேயில் இருந்து செர்மனி செல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். கையில் இருந்த வாய்ப்பை தவறவிட மனதில்லாமல் போனதால் செர்மனி பயணதிற்கு தயாரானேன்.
நான் இருக்கும் பேர்கன் நகரத்தில் இருந்து ஃபிராங்க்பர்ட் நகரம் சென்று அங்கிருந்து பெர்லின் நகரம் சென்றடைந்தேன். வானூர்தி நிலையத்தில் இருந்து பெர்லின் நகரம் நோக்கிச் செல்கையில் பல வீடுகளின் தோற்றம் எனக்கு வியப்பளித்தது. பல பெரிய வீடுகளும் ஆங்காங்கே சிறு சிறு குறுகலான வீடுகளும் இருந்தது. செர்மனியின் கட்டிடக்கலையினைத் தவிர்த்து பார்க்கையில் எனக்கு சென்னையில் பயணிக்கிறோமோ என்ற எண்ணமும் மேலோங்கியது.
பிறகு மலிவான தங்கும் விடுதி ஒன்றில் தங்கினேன். அடுத்த நாள் காலை அவர்களே இலவச நடைச் சுற்றுலா ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார்கள். முதலில் பெர்லின் நகரம் பற்றின அறிமுகத்திற்கு மிகவும் பயனுள்ள சுற்றுலாவாக இருந்தது. 4 மணி நேரம் பலவற்றைச் சுற்றிப்பார்த்தேன் பல தகவல்களைத் தெரிந்தும் கொண்டேன்.
சுற்றுலாவிற்கு எங்களை அழைத்துச்சென்ற பெண்ணிடம் செர்மனியர்கள் அனைவருக்கும் ஆங்கில அறிவு இருக்கிறதா? என்று கேட்டேன். அப்பொழுது அவர், "இங்கு இளம் வயதினருக்கு ஆங்கிலம் பேசத்தெரியும், ஆனால் தேவையில்லாத இடத்து பேசமாட்டார்கள். பெரும்பாலான முதியவர்களுக்கு ஆங்கில அறிவே இருக்காது" என்றார். ஏன் இதனைக் கேட்டீர்கள் ? என என்னிடம் வினவினார்.
அதற்கு நான், "எங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் ஆங்கிலம் தெரியாது என்பதை ஒரு மானக்கேடாகவே கருதுகிறார்கள். ஆங்கிலம் தெரியவில்லை என்று சொன்னால் தன்னை முட்டாளாகக் கருதிவிடுவார்களோ என்ற அச்சம் அனைவரிடத்திலும் காணப்படும். அதனால் நான் எப்பொழுதும் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்குள்ள மக்கள் ஆங்கிலம் என்பதை எவ்வாறு பார்க்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்வேன்" என்றேன்.
"ஆங்கிலம் என்பதை ஒரு மொழியாக மட்டும்தானே பார்க்கவேண்டும். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் புவியே கிராமமாக மாறிவிட்டதால் அனைவருக்கும் ஆன பொது மொழியாக ஆங்கிலம் போன்ற மொழி இருப்பது அவசியம்தான். இருப்பினும் அதைத் தெய்வ மொழியாக பார்த்து வணங்கத்தொடங்கிவிட்டால் பிறகு ஒவ்வொரு பிராந்தியத்திலும் காலங்காலமாய் நிலைத்து நிற்கும் மொழிகள் அழிந்துவிடுமே! அதனை உங்கள் மக்கள் உணரவில்லையா?" என்றார்.
"ஆங்கில மோகம் அதிக அளவில் காணப்படுவதற்கு ஒரே ஒரு காரணத்தில் வரையறுக்கமுடியும். நாங்கள் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள். இன்று ஆங்கில மொழியால் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் தங்களதுசுயமரியாதை, மொழி, பண்பாடு ஆகியவற்றைக் காப்பதை தங்கள் நிகழ்காலக் கடமையாகக் கருதுகிறார்கள்" என்று நினைக்கிறேன் என்றேன்.
அதற்கு ஆம் என்பது போலத் தலையசைத்தார். அதற்குள் எங்களது சுற்றுலாத் தொடங்கும் நேரம் வந்துவிட்டதால் எங்கள் பேச்சு அத்துடன் தடைப்பட்டது.
பிரான்டன்பர்கர் வாசல் (Brandenburg Gate):
விடுதியில் இருந்து இருபதிற்கும் மேற்பட்டோர் சுற்றுலாவிற்கு ஒன்றாகக் கிளம்பினாலும், சுற்றுலாத் தொடங்கும் இடத்தில் ஒவ்வொருவரின் விருப்ப மொழிக்கு ஏற்ப குழு பிரிக்கப்பட்டது. நான் பயணித்த குழுவில் வெவ்வேறு விடுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட வேறு பலரும் இணைந்து கொண்டனர். அதில் என்னைத் தவிர ஏனைய அனைவரும் தங்கள் இணையர் அல்லது நண்பர்களோடு வந்திருந்ததால், நான் தனியாகவே இருக்கும் சூழல் அமைந்துவிட்டது. ஒரே ஒரு வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் மட்டும் என்னைப் போலவே தனியாக வந்திருந்தார். பேச்சுக்கொடுத்துப் பார்த்தேன். அவர் கருத்தரங்கம் ஒன்றிற்காக வந்திருப்பதாகக் கூறினார். இருப்பினும் நாங்கள் இருவருமே அவ்வறிமுகத்திற்கு பிறகும் தனித்தனியாகவே சுற்றுலாவில் நடந்து சென்று கொண்டிருந்தோம்.
எங்களது சுற்றுலாத் தொடங்கிய இடம் செர்மனியின் முக்கியச் சின்னமாகவும் பெர்லின் நகரத்தின் வாசலாகவும் திகழ்ந்த பிரான்டன்பர்கர் வாசல்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக வரலாற்றைச் சுமந்து நிற்கும் இவ்வாசல் இப்பொழுது சுதந்திரம் மற்றும் ஒற்றுமைக்கான சின்னமாகவும் திகழ்கிறது. நாசி இயக்கம் ஆட்சியைப் பிடித்தபொழுது இவ் பிரான்டன்பர்கர் வாசலை தங்கள் அடையாளமாக வைத்திருந்திருக்கிறார்கள்.
கிழக்கு மற்றும் மேற்கு பெர்லின் இணைவதற்கு முன் இவ்வாசலும் பெர்லின் சுவரின் ஒர் அங்கமாகவே இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது, அக்காலக்கட்டத்தில் ரசிய நாட்டுக் கட்டுப்பாட்டு பகுதியினை ஐக்கிய அரசாட்சியின் (United Kingdom) கட்டுப்பாட்டு பகுதியுடன் இணைக்கும் இடமும் இவ்வாசல்தான்.
1987 ஆம் ஆண்டு, கிழக்கு மற்றும் மேற்கு பெர்லினின் இணைப்பிற்குமுன் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மேற்கு பெர்லின் மக்களிடம், "இவ்வாசல் கண்ணீரைச் சுமந்து நிற்கிறது" என்று கூறிய வரலாற்று சிறப்பு மிக்க சொற்றொடர் பெர்லினின் வரலாற்றை மட்டும் அல்ல இவ்வாசலுக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் காட்டுவதாக இருக்கிறது.
இனி நடைச்சுற்றுலாவில் நான் தெரிந்துக்கொண்ட வரலாற்றின் சுவடுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பயணங்கள் தொடரும்..